அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்;
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது.
அதேவேளை, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த மே மாதம் 10ம் தேதி அமெரிக்கா அறிவித்தது.
இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. அதேவேளை, கூடுதல் வரிவிதிப்பு நிறுத்தத்திற்கான 90 நாட்கள் அவகாசம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவடைந்ததையடுத்து கால அவகாசம் கூடுதலாக 90 நாட்கள் (செப்டம்பர் 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றச்சாட்டி வருகிறார். மேலும், டிக்டாக் செயலியின் இயக்க உரிமம் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதற்காக டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க டிரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக சீன, அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிம்ரப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், டிக்டாக் செயலி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சர்வதேச அரசியல் சூழ்நிலை, வர்த்தக போருக்கு மத்தியில் டிரம்ப், ஜி ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.