அணுகுண்டுகளை சுமக்கும் திறன் கொண்ட எப்-35 ஜெட் விமானங்களை வாங்க இங்கிலாந்து திட்டம்
இங்கிலாந்து அரசின் முடிவிற்கு நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் வரவேற்பு தெரிவித்துள்ளார்.;
Image Courtesy : @Keir_Starmer
லண்டன்,
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 'எப்-35' ஜெட் விமானங்களை வாங்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நேட்டோவின் பகிரப்பட்ட வான்வழி அணுசக்தி இயக்கத்தில் இங்கிலாந்து இணையும் என்றும் அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மொத்தம் 12 விமானங்களை வாங்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அணுசக்தி ஆற்றல் விவகாரத்தில் இது ஒரு வலிமையான நிலைப்பாடு என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இங்கிலாந்து அரசின் முடிவிற்கு நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது நேட்டோவிற்கு மற்றொரு வலுவான பங்களிப்பு என்று அவர் கூறினார். 1990-களில், பனிப்போர் முடிந்த பிறகு வான்வழியாக வீசப்படும் அணு ஆயுதங்களை இங்கிலாந்து படிப்படியாக கைவிட்டது. அதன் அணு ஆயுதக் கிடங்கில் இப்போது நீர்மூழ்கி கப்பல் சார்ந்த ஏவுகணைகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.