அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப்
லண்டனில் வருகிற திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது.;
வாஷிங்டன்,
அமெரிக்கா மற்றும் சீனா என இரு பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தக போரானது கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து காணப்படுகிறது. இதனால், உலக நாடுகளில் தாக்கம் ஏற்பட்டு உள்ளது. எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளும் எதிர்கொண்டுள்ளன.
இதனை தொடர்ந்து, இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினர்.
இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது என குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்க-சீன அதிகாரிகள் லண்டனில் அடுத்த வாரம் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இதில், அமெரிக்க தரப்பில் கருவூல மந்திரி ஸ்காட் பெஸ்சென்ட், வர்த்தக மந்திரி ஹோவர்டு லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமீசன் கிரீர் உள்பட அதிகாரிகள், சீன தலைவர்களுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள். இந்த சந்திப்பு நன்றாக நடைபெற வேண்டும் என தன்னுடைய சமூக ஊடக பதிவில் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பு லண்டனில் வருகிற திங்கட்கிழமை நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு 58,200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் வர்த்தகம் நடந்த நிலையில், இரு நாடுகளின் பரஸ்பர வரி விதிப்புகளால் நடப்பு ஆண்டில் வர்த்தக சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த வளர்ச்சிக்கு தடையாக அமெரிக்காவே உள்ளது என சீனா குற்றச்சாட்டை கூறியது.