கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டென்மார்க், தனது படைகளை குவித்து வருகிறது.;
கோபன்ஹேகன்,
டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தனக்கு தேவை எனவும், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை மூலம் அதனை இணைக்க தயார் எனவும் டிரம்ப் கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டென்மார்க் அங்கு தனது படைகளை குவித்து வருகிறது.
இந்த நிலையில் கிரீன்லாந்து இணைப்பு தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார். இதனை டென்மார்க் பாதுகாப்பு துறை மந்திரி ட்ரோல்ஸ் லண்ட் பவுல்சன் வரவேற்று உள்ளார். எனினும் இந்த சந்திப்பு எங்கு, எப்போது நடைபெறும் என்ற எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது. டென்மார்க் அல்லது கிரீன்லாந்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு. சைப்ரஸ், லத்தீன் அமெரிக்கா, கிரீன்லாந்து, உக்ரைன் அல்லது காசா என எங்கு நடந்தாலும், சர்வதேச சட்ட மீறல்களை ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தார்.