அமெரிக்கா: இந்திய வம்சாவளி ஓட்டல் மேலாளர் தலை துண்டித்து கொலை
இந்திய வம்சாவளியின் மனைவி மற்றும் மகன் கண் எதிரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
வாஷிங்டன்,
அமெரிக்கா டெக்சாசில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தவர் பாப் என்கிற நாக மல்லையா (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.
அதே ஓட்டலில் 37 வயதான் கோபோஸ் மார்டினெஸ் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஓட்டல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகமல்லையா ஓட்டலில் உள்ள பழுதான சலவை எந்திரத்தை பயன்படுத்த வேண்டாம் என அவரிடம் கூறினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலாளர் சத்தம் போட்டது கோபோஸ் மாரடினெசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். வெளியில் சென்ற அவர் சிறிது நேரம் கழித்து கையில் அரிவாளுடன் ஓட்டலுக்கு திரும்பினார். அப்போது வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த மேலாளர் நாக மல்லையாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதனால் நிலை குலைந்த அவர் உயிருக்கு பயந்து ஓட்டல் அலுவலகத்தை நோக்கி ஓடினார்.
அங்கு அவரது மனைவியும், 18 வயது மகனும் இருந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நாக மல்லையாவை விரட்டி சென்ற கோபோஸ் மார்டினெஸ் தொடர்ந்து அரிவாளால் அவரை வெட்டினார். இதை தடுக்க முயன்ற மனைவி மற்றும் மகனை கீழே தள்ளி விட்டார்.
ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த நாக மல்லையா தலையை கோபோஸ் மார்டினெஸ் துண்டித்து எடுத்தார். பின்னர் அந்த தலையை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றார். நாக மல்லையாவின் மனைவி மற்றும் மகன் கண் எதிரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கோபோஸ் மார்டினெசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.