அமெரிக்காவில் நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரெயிலில் அடிபட்டு பலி
ரெயில் மோதி பெண் இறந்தது குறித்து எக்சிடர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Image credit: facebook/Alicia Leonardi
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷைர் மாநிலம் எக்சிடர் நகரைச் சேர்ந்தவர் அலிசியா லியோனார்டி (வயது 42). இவர் தனது நண்பர் ஒருவருடன் கடந்த 2-ம் தேதி பிற்பகல் நடந்துசென்றுகொண்டிருந்தார். உடன் ஒரு நாயையும் அழைத்துச் சென்றார்.
மரங்கள் நிறைந்த பகுதியில் ரெயில் பாதையின் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் இருந்து ஒரு ரெயில் வந்துள்ளது. அலிசியாவும், அவரது நண்பரும் ஓரமாக நடைபாதையில் நடந்து செல்ல, கட்டவிழ்த்து விடப்பட்ட நாய் மிரண்டுபோய் தண்டவாளத்தில் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் நாயை காப்பாற்றுவதற்காக பின்னால் ஓடினர். ஆனால் அவர்கள் நாயை நெருங்குவதற்குள் வேகமாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் அலிசியா லியோனார்டி பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். அதேசமயம், மிரண்டு ஓடிய நாயும் அடிபடாமல் உயிர்தப்பியது.
இந்த சம்பவம் குறித்து எக்சிடர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் இதுபோன்று ரெயிலில் அடிபட்டு உயிர்ப்பலி ஏற்படுவது இது முதல் முறையல்ல என்று தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.