வாஷிங்டன் டி.சி. அழகாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது; தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட டிரம்ப்
வாஷிங்டன் டி.சி.க்கு செல்லுங்கள். உருவாக்கி வைக்கப்பட்ட வரலாற்றை அனுபவித்து மகிழுங்கள் என டிரம்ப் பகிர்ந்துள்ளார்.;
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, சீனா, மெக்சிகோ, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.
சமீபத்தில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த எச்1-பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.88 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடி (1 லட்சம் டாலர்) அளவுக்கு உயர்த்தப்படுகிறது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், வாஷிங்டன் டி.சி.யில் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்தேன். கடந்த ஆண்டை விட முற்றிலும் வேறுபட்ட ஒரு பகுதியாக அது இருக்கிறது. கூடாரங்கள் இல்லை. சீரமைக்கப்பட்ட புற்கள் மற்றும் பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், கும்பல்களோ அல்லது கொடிய குற்றவாளிகளோ கிடையாது..
அந்த இடம் அழகாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. தொடர்ந்து அப்படியே இருக்க போகிறது. நல்ல அரசாங்கம் என்னென்ன மாற்றங்களை செய்துள்ளது! வாஷிங்டன் டி.சி.க்கு செல்லுங்கள். உருவாக்கி வைக்கப்பட்ட வரலாற்றை அனுபவித்து மகிழுங்கள் என பகிர்ந்துள்ளார். டிரம்ப், அவருடைய அரசை அவரே புகழ்ந்து கொள்ளும் வகையில் பதிவு அமைந்துள்ளது.
கடந்த ஆகஸ்டில் தேசிய அவசரநிலை உத்தரவை, டிரம்ப் பிறப்பித்து இருந்த நிலையில் அது முடிவுக்கு வந்த சில நாட்களில் அவர் இந்த பதிவை வெளியிட்டு உள்ளார். தேசிய அவசரநிலையின்போது, தேச பாதுகாப்பு படைகளும் மற்றும் கூடுதலாக மத்திய படையினரும் பணியில் ஈடுபட்டனர். இதனால், தலைநகரில் குற்றங்கள் குறைந்துள்ளன என டிரம்ப் அப்போது குறிப்பிட்டார்.
எனினும், உள்ளூர் போலீசார், மத்திய குடியுரிமை அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டால், மீண்டும் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய அவசரநிலை உத்தரவை, பிறப்பிக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.