ஏமன்: கேரள நர்ஸ் விடுதலை ஆவதில் மீண்டும் ஒரு சிக்கல்
ஏமனில், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் அப்துல் பதே, ரத்த பணம் ஏற்க மறுத்து விட்டார்.;
புதுடெல்லி,
ஏமனில் கிளினிக் நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா, கொலை வழக்கு ஒன்றில் அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார். இதன்படி வழக்கில், அவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தள்ளிவைக்கப்படுகிறது என நேற்று தகவல் வெளியானது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு, கேரள மத தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரின் தீவிர முயற்சியால் இந்த மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், கேரள நர்ஸ் விடுதலை ஆவதில் மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உயிரிழந்த மஹ்தியின் குடும்பத்தினர், தியாவை (ரத்த பணம்) ஏற்க மறுத்து உள்ளனர்.
ஏமன் நாட்டு இஸ்லாமிய சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், ரத்த பணம் பெற்று கொண்டு, குற்றவாளியை மன்னித்து விட்டு விடலாம். அவர்கள் பணம் பெற்று கொண்டால், குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, தண்டனை குறையும்.
ஆனால், உயிரிழந்த நபரின் குடும்பத்தினர், நடந்த குற்றத்திற்கு இணையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினால், அதற்கு சட்டம் அனுமதிக்கிறது. இதனால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கிடைக்கும்.
இந்நிலையில், மஹ்தியின் சகோதரர் அப்துல் பதே, ரத்த பணம் ஏற்க மறுத்து விட்டார். மஹ்தி கொல்லப்பட்டு, அவருடைய உடல் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது மன்னிக்க முடியாதது என அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் தண்டனை தள்ளி வைக்கப்பட்டபோதும், பிரியா விடுதலை ஆவதில் மீண்டும் சிக்கல் நீடிக்கிறது.
வழக்கு விவரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). இவர் ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-ல் உள்நாட்டு போரால், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால், நிமிஷா பிரியாவால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.
2015-ம் ஆண்டில் தலால் அப்தூ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனா நகரில் கிளினிக் ஒன்றை பிரியா நடத்த தொடங்கினார். அந்நாட்டின் குடிமக்களே கிளினிக் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நடத்த அனுமதி உண்டு.
ஆனால், கிளினிக்கை ஆரம்பித்ததும் மஹ்தி, அனைத்து வருவாயையும் தனக்கு தரும்படி பிரியாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார். இதுபற்றி ஏனென்று கேட்டதற்கு, மஹ்தி மோதல் போக்கில் ஈடுபட்டு உள்ளான்.
இதன்பின்னர், போலியான ஆவணங்களை கொண்டு, தன்னை பிரியா திருமணம் செய்து கொண்டார் என மோசடியில் ஈடுபட்டதுடன், மிரட்டல் விடுத்தும், சித்ரவதை செய்தும் வந்துள்ளான்.
இந்த விவகாரத்தில் போலீசுக்கு போன நிமிஷாவுக்கு அநீதியே பரிசாக கிடைத்துள்ளது. போலீசார் பிரியாவை 6 நாட்கள் சிறையில் அடைத்தனர். சிறை கைதியாக இருந்து வெளிவந்த பின்னர் மஹ்தியின் கொடுமை அதிகரித்தது.
2017-ம் ஆண்டு ஜூலையில், கிளினிக் அருகே இருந்த சிறையின் வார்டனிடம் பிரியா, உதவி கேட்டுள்ளார். அதற்கு அவர், அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்கும்படி கேட்க யோசனை கூறியுள்ளார். ஆனால், மயக்க மருந்து செலுத்தப்பட்ட மஹ்திக்கு அதனை ஏற்று கொள்ளும் அளவுக்கு உடல்நிலை இல்லாத சூழலில் மரணம் அடைந்ததில், பிரியா வழக்கில் சிக்கினார்.
இதில், அவருக்கு விசாரணை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவருடைய மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது. வழக்கில், அவருக்கு இன்று (ஜூலை 16) மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தள்ளிவைக்கப்படுகிறது என நேற்று அறிவிக்கப்பட்டது.