2-ம் கட்ட தேர்தலின்போது அதிக வெப்பநிலை இருக்குமா..? - வானிலை ஆய்வு மையம் தகவல்

வாக்குப்பதிவு நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

Update: 2024-04-22 23:38 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அப்போதே வெயில் உச்சமாகத்தான் இருந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுவதால் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

வெயில்கால முன்னேற்பாடு பணிகளை கவனிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் கமிஷனர்கள் கியானேஸ்குமார், சுக்பீர்சிங் சந்து மற்றும் இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அதிகாரி, சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலின்போது கவலைப்படும் அளவுக்கு வெப்பநிலை இருக்காது என வானிலை ஆய்வுமைய தலைமை அதிகாரி தேர்தல் கமிஷனிடம் தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கும் முன்னதாக வெப்பநிலையை கண்காணிக்க தனி பணிக்குழுவை உருவாக்குவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஒவ்வொரு வாக்குப்பதிவுக்கும் முன்னதாக தேர்தல் கமிஷன், வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய பணிக்குழு வெப்ப அலை மற்றும் ஈரப்பதத்தின் தாக்கத்தை 5 நாட்களுக்கு மதிப்பாய்வு செய்யும். தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் நிலைமைகளை ஆராய்ந்து சுகாதாரத்திற்கு தேவையான அறிவுரைகளை சுகாதாரத்துறை வழங்க வேண்டும். வாக்குச்சாவடி பகுதிகளில் வெப்ப அலை தாக்கத்தை தணிக்க, எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொதுமக்களிடையே தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்