நாடாளுமன்ற தேர்தலில் ஷிமோகா தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன் - ஈஸ்வரப்பா

கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக பா.ஜ.க. நேற்று அறிவித்தது.

Update: 2024-04-23 06:33 GMT

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா. நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு ஷிமோகா தொகுதியிலும் தன் மகன் கந்தேசுக்கு ஹாவேரி தொகுதியிலும் போட்டியிடுவதற்காக ஈஸ்வரப்பா கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவையும், ஹாவேரியில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையையும் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தது.

இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்தார். இதையடுத்து அமித்ஷா அவரிடம் பேசி, முடிவை கைவிடுமாறு கோரினார். அதற்கு ஈஸ்வரப்பா, ''கர்நாடக பா.ஜ.க. எடியூரப்பா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது இளையமகன் விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று நிபந்தனை விதித்தார். இதனை அமித்ஷா ஏற்க மறுத்தார்.

இதையடுத்து ஈஸ்வரப்பா ஷிமோகாவில் சுயேச்சையாக போட்டியிட தனது வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈஸ்வரப்பாவை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார்.

நேற்று வேட்புமனுக்கள் திரும்பப்பெற கடைசி நாளாகும். இதையடுத்து எப்படியாவது ஈஸ்வரப்பாவை வாபஸ் பெற செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரம் காட்டினர். ஆனால் கடைசி நிமிடம் வரை அவர் போட்டியில் இருந்து விலகவில்லை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கான நேரமும் முடிந்துவிட்டதால் ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.

இதற்கிடையே. பா.ஜ.க. மாநில ஒழுங்குமுறை குழுத்தலைவர் லிங்கராஜ் பாட்டீல் கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல் ஷிமோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு கட்சிக்கு தர்மசங்கடத்தை ஈஸ்வரப்பா ஏற்படுத்தி உள்ளார். இது கட்சி ஒழுக்கத்தை மீறும் செயலாகும். எனவே அவரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஷிமோகா தொகுதியில் கட்சி சாராத வேட்பாளராக போட்டியிடுகிறேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி நான் கவலை அடையவில்லை. நான் 5 முறை தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக இருந்துள்ளேன். எப்படியும் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைவேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு கடுமையாக போராடியவர்களில் நானும் ஒருவர்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்