காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் - பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி, தனது ஓட்டு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தி, 2 முஸ்லிம் நாடுகளை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-05-24 00:02 GMT

கோப்புப்படம்

சண்டிகார்,

அரியானா மாநிலம் மகேந்திரகாரில் பிரதமர் மோடி நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "'இந்தியா' கூட்டணி, வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக இருக்கிறது. அரியானாவில் ஒவ்வொருவரும் 'ராம் ராம்' என்று சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்களை கைது செய்து விடும்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகர் ஒருவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவிலுக்கு பூட்டு போட விரும்புவதாக தெரிவித்தார். மக்களின் பக்தியை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது.

இந்த தேர்தலில் நீங்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, நாட்டின் எதிர்காலத்தையும் முடிவு செய்யப் போகிறீர்கள். ஒருபுறம், மக்களின் சேவகன் மோடி இருக்கிறான். மற்றொரு புறம், யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 'இந்தியா' கூட்டணி, ஆண்டுக்கு ஒரு பிரதமர் வீதம் 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறது. இப்படியெல்லாம் நாட்டை நடத்த முடியுமா? பிரதமர் பதவிக்கு அங்கு சண்டை நடக்கிறது. பசு, பால் தருவதற்கு முன்பே நெய்க்கு சண்டை நடக்கிறது.

எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து தனது ஓட்டு வங்கிக்கு அளிக்க 'இந்தியா' கூட்டணி விரும்புகிறது. நான் உயிருடன் இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்காளத்தில், கடந்த 12 ஆண்டுகளில், முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை கொல்கத்தா ஐகோர்ட்டு ரத்து செய்திருப்பதை பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். கோர்ட்டு இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும்?

ஆனால், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி, அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். அவர் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஊடுருவல்காரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க விரும்புகிறார். இதுபோல், காங்கிரஸ் கட்சி, தனது ஓட்டு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தி, 2 முஸ்லிம் நாடுகளை உருவாக்கி உள்ளது" என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்