முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்: அமித்ஷா உறுதி

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2024-05-23 23:39 GMT

கோப்புப்படம்

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் பா.ஜனதா வேட்பாளர் ஜெகதாம்பிகா பாலுக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், "பிரதமர் மோடி, பயங்கரவாதத்தையும், நக்சல் பயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட்டினார். நாட்டை பாதுகாத்தார். அவர் 130 கோடி மக்களை பற்றியும் கவலைப்படுகிறார். ஆனால், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் தங்கள் குடும்பத்தினரை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்.

தங்கள் குடும்பத்தினருக்காகவே அவர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால், மோடிக்கு 130 கோடி இந்தியர்கள்தான் அவரது குடும்பம். மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை ரத்து செய்ய நான் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தபோது ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். அந்த மசோதா நிறைவேறினால், பாகிஸ்தானில் ரத்த ஆறு ஓடும் என்று அவர் கூறினார். ஆனால், பிரதமர் மோடியோ, ''ஒரே நாட்டில் இரு அரசியலமைப்பு சட்டங்களும், இரு சட்டங்களும் சரிப்படாது. 370-வது பிரிவு ரத்து செய்யப்படும். பாகிஸ்தானால் ஒரு கல்லைக்கூட எறிய முடியாது. ரத்த ஆறு ஒரு புறம் இருக்கட்டும்'' என்று கூறினார்.

'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' என்ற ராணுவத்தின் கோரிக்கையை இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரால் நிறைவேற்ற முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றியது. முடிக்கப்படாத பணிகளை ஒருவரால் முடிக்க முடியும் என்றால், அது பிரதமர் மோடி மட்டும்தான்" என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்