தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் நாளை வெளியாகிறது

தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

Update: 2024-03-29 12:44 GMT

கோப்புப்படம் 

சென்னை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ந்தேதியே தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு அளித்து இருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். புதுச்சேரியில் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது.

இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 664 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதேபோல், புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

அதன்பின்னர், வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள்? என்ற இறுதி விபரம் தெரியவரும். தொடர்ந்து சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்