21 முறை டக் அவுட் ஆனால் மட்டுமே.... - கம்பீரின் ஆறுதலான வார்த்தைகள் குறித்து சாம்சன் நெகிழ்ச்சி
கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவின் ஆறுதல்தான் சிறப்பாக செயல்பட உதவியதாக சாம்சன் தெரிவித்துள்ளார்.;
image courtesy:PTI
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காராக ஆடி வரும் அவர் கடந்த 2015-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். ஆனால் தொடர்ச்சியாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால் அணியில் இருந்து அடிக்கடி ஓரங்கட்டப்பட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வாய்ப்புகளில் அவர் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஞ்சு சாம்சன், டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரும், டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும் நியமிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் நான் துலீப் கோப்பையில் விளையாடி வந்தேன். சூர்யகுமார் யாதவ் வேறு அணிக்காக விளையாடினார்.
அப்போது சூர்யகுமார் என்னிடம் ‘உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. இந்திய அணி அடுத்தடுத்து 7 ஆட்டங்கள் விளையாட உள்ளது. அனைத்து ஆட்டத்திலும் உங்களுக்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு வழங்க போகிறேன்’ என்று கூறினார். அது எனக்கு உற்சாகம் தந்தது. இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் இரு ஆட்டங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை (2 போட்டிகளிலும் டக் அவுட்).
அந்த சமயத்தில் ஓய்வறையில் நான் சோகமாக இருந்தேன். இதை பார்த்த கவுதம் கம்பீர், என்னாச்சு என்று கேட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லையே என ஏமாற்றத்தை வெளிப்படுத்தினேன். அதற்கு கம்பீர் ‘அதனால் என்ன?, நீங்கள் 21 முறை டக்-அவுட் ஆனால் மட்டுமே அணியில் இருந்து நீக்குவேன்’ என்று சொன்னார். பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இதுபோன்று சொல்லும்போது இயல்பாகவே நமது நம்பிக்கை அதிகரிக்கும். அதுவே நான் தற்போது சிறப்பாக செயல்பட உதவியது” என்று கூறினார்.