2-வது டெஸ்ட்: சிறப்பான பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற இந்தியா ஏ
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;
image courtesy:PTI
பெங்களூரு,
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 132 ரன்கள் (175 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். தென் ஆப்பிரிக்க ஏ தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் எம்.ஜே. அக்கர்மன் பொறுப்பாக ஆடி அணியை கவுரமான நிலைக்கு கொண்டு சென்றார். சதமடித்து அசத்திய அவர் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணியில் எம்.ஜே. அக்கர்மன், ஜோர்டன் ஹெர்மன் (26 ரன்கள்), சுப்ரயென் (20 ரன்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.
47.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா ஏ 34 ரன்கள் முன்னிலை பெற்றது. சிறப்பாக பந்துவீசிய இந்தியா ஏ தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ள இந்தியா தற்போது வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 5 ரன்கள் அடித்துள்ளது. கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்சன் களத்தில் உள்ளனர். அபிமன்யூ ஈஸ்வரன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.