ஆஸி.க்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் கூறியது என்ன..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது.;

Update:2025-10-25 16:27 IST

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

இந்த தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் தலைமையில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில், “நாங்கள் கிட்டத்தட்ட சரியான ஆட்டத்தையே விளையாடினோம். ஹர்ஷித் மிடில் ஓவர்களில் வேகமாக பந்து வீசி வருகிறார். அவர்கள் இருவரும் (ரோகித் மற்றும் கோலி) பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்