3வது டி20 : இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்ற வங்காளதேசம்
3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.;
கொழும்பு,
இலங்கை - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 132 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா 46 ரன்னும், தசுன் ஷனகா ஆட்டமிழக்காமல் 35 ரன்னும் எடுத்தனர். கேப்டன் சரித் அசலங்கா (3 ரன்) உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி. 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5வது அரைசதம் அடித்த தன்சித் ஹசன் 73 ரன்களுடனும் (47 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்), தவ்ஹித் ஹிரிடாய் 27 ரன்னுடனும் (25 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.