3-வது டெஸ்ட்: இந்தியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - முன்னாள் கேப்டன் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.;
மும்பை,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் தொடக்கத்தில் 4 விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கான காரணம் என்று இந்திய முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நாம் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்று நினைக்கிறேன். 2-வது இன்னிங்சை நாம் நேர்மறையாக தொடங்கவில்லை. நீங்கள் பார்த்தால் 4-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்தோம். அதனால் கடைசி நாளில் வெல்வது எளிது கிடையாது. அங்கே உங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. போட்டிக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் புத்திசாலித்தனமாக இருக்க முடியும்.
நமது இறுதி கட்ட பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாடினார்கள் என்று நான் ஒப்புக்கொள்வேன். அவர்களுக்கு பாராட்டுகள். ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் ரூட், பஷீர் ஆகியோர் பவுலிங் செய்த 4 - 5 ஓவர்களை கொஞ்சம் அவர் அதிரடியாக எதிர்கொண்டிருக்கலாம். அங்கே அவர் இன்னும் 15 - 20 ரன்கள் எடுத்திருந்தால் நமது வேலை எளிதாக மாறியிருக்கும்.
ஆனால் அவரது பேட்டிங் பற்றி நாங்கள் குறை சொல்ல முடியாது. அவர் பாறையைப் போல் பேட்டிங் செய்தும் நாளின் இறுதியில் இந்திய அணிக்கு சாதகமாக முடிவு கிடைக்கவில்லை. நாம் 2-வது இன்னிங்சில் தடுமாறினோம். ராகுலும் நன்றாக பேட்டிங் செய்தார். ஏதோ ஒரு தருணத்தில் நாம் இங்கிலாந்து பவுலர்களை ஆதிக்கம் செலுத்த விட்டு விட்டோம்" என்று கூறினார்.