4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அபார பேட்டிங்.. முதல் இன்னிங்சில் 669 ரன்கள் குவிப்பு

இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் மட்டுமே அடித்தது.;

Update:2025-07-26 17:18 IST

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ஆலி போப் (20 ரன்), முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (11 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக ஆடிய ஆலி போப் 71 ரன்களிலும், ரூட் 150 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 544 ரன்கள் சேர்த்து, 186 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும், லியாம் டாசன் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் லியாம் டாசன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரைடன் கார்ஸ் களமிறங்கினார். மறுபுறம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினார். சதம் அடித்த பிறகு அவர் அதிரடியாக விளையாடினார். ஸ்டோக்ஸ் உடன் கைகோர்த்த பிரைடன் கார்சும் அதிரடியாக விளையாட இங்கிலாந்து அணி வலுவான முன்னிலையை நோக்கி பயணித்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் அடித்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து கடைசி விக்கெட்டாக ஜோப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட கார்ஸ் 54 பந்துகளில் 47 ரன்கள் அடித்த நிலையில் கடைசி விக்கெட்டாக அவுட்டானார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 311 ரன்கள் அதிகமாகும். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 311 ரன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்