4-வது டெஸ்ட்: சாய் சுதர்சன் விளையாட வேண்டும் - காரணத்துடன் விளக்கிய இந்திய முன்னாள் வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி பின்தங்கி உள்ளது.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருண் நாயருக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் சாய் சுதர்சனை விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறியுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த தொடரில் இங்கிலாந்து அணியினர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச சிரமப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரிஷப் பண்ட் 2 சதங்கள் அடித்துள்ளார், ஜடேஜாவும் தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்துள்ளார். எனவே மற்றொரு இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை விளையாட வைக்க வேண்டும். கருண் நாயருக்கு மூன்று ஆட்டங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. எனவே இந்திய அணி சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.