தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படும் அபிமன்யு ஈஸ்வரன்.. வாக்குறுதி கொடுத்த கம்பீர்... அவரது தந்தை பேட்டி

அபிமன்யு ஈஸ்வரன் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவில்லை.;

Update:2025-08-08 15:28 IST

மும்பை,

இந்திய இளம் வீரரான அபிமன்யு ஈஸ்வரன் உள்ளூர் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டார். ஆனால் ஏறக்குறைய 2.5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவில்லை. அவருக்கு பின் தேர்வு செய்யப்பட்டவர்களில் 15 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ளனர்.

அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது பலரது மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் நீண்ட ஆண்டு காலமாக தனது அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கும் அவருக்கு ஏதாவது ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரனும் இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படையாகவே காட்டியிருந்தார்.

இந்நிலையில் தனது மகனுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குறுதி கொடுத்துள்ளதாக அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கவுதம் கம்பீர், என் மகனிடம் பேசியபோது ‘நீ சரியான விஷயங்களைச் செய்கிறாய். நன்றாக விளையாடுகிறாய். உனக்கான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும். 1-2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பு வழங்கி விட்டு, புறக்கணிக்க போவதில்லை. உன்னுடைய உழைப்பிற்கான பலன் உனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என ஒட்டு மொத்த பயிற்சியாளர்களும் உறுதி அளித்துள்ளனர்’என சொல்லியுள்ளார்.

இதுதான் என் மகன் என்னிடம் சொன்னது. ஒட்டுமொத்த பயிற்சி குழுவும் அவன் நீண்ட காலம் வாய்ப்பை பெறுவான் என்று உறுதியளித்துள்ளது. அதுதான் நான் சொல்லக்கூடிய சிறந்தது. என் மகன் 4 வருடங்களாகக் காத்திருக்கிறான், அவன் 23 வருட கடின உழைப்பில் ஈடுபட்டுள்ளான்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்