ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி: சுப்மன் கில்லுக்கு இந்திய முன்னாள் வீரர் பாராட்டு
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.;
image courtesy:PTI
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிமுகம் ஆன சுப்மன் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளில் 754 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக முதலிடத்தை பிடித்ததோடு பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார். அதனால் அவரை தொடர் நாயகனாக இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தேர்வு செய்தார்.
இந்த தொடருக்கு முன்னதாக பல வித விமர்சனங்களை சந்தித்த அவர் அவை அனைத்திற்கும் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்தார். மேலும் இந்த தொடரில் ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்த அவர் இங்கிலாந்து அணியினருடன் சில நேரங்களில் வாக்குவாதமும் செய்தார்.
ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இந்த தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சுப்மன் கில்லை பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.
அந்த வரிசையில் தற்போது இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சுப்மன் கில்லின் செயல்பாடுகளை பாராட்டி சில கருத்துகளை பேசியுள்ளார். அதில், “இந்த இங்கிலாந்து தொடரில் அவர் சில நேரங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் எல்லை மீறினார். ஆனால் அதை அவர் விரைவில் மாற்றிக் கொள்வார் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் இங்கிலாந்து ஊடகங்களை அவர் மிகச்சிறப்பாக கையாண்டார்.
குறிப்பாக இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவரது பார்ம் மீது சந்தேகம் இருந்த வேளையில், ‘இந்த இங்கிலாந்து தொடரில் இரண்டு அணிகளிலும் சேர்த்து நான்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பேன்’ என்று அவர் கூறியது அவருடைய நம்பிக்கையை வெளிக்காட்டியது. அவர் கூறியது போன்று இந்த தொடரை மிகச்சிறப்பாக முடித்துள்ளார். இந்த தொடருக்கு முன் அவரது பேட்டிங்கில் ஒரு குறை இருந்தது. அதனை சரி செய்ய வழியை கண்டுபிடித்து இந்த தொடரில் அசத்திவிட்டார்” என்று கூறினார்.