ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி: பண்ட் மட்டுமல்ல.. எலும்பு முறிவுடன் பேட்டிங் செய்த மற்றொரு இந்திய வீரர்.. தகவல்
இதனால் அவர் எதிர்வரும் துலீப் கோப்பை தொடரை அவர் தவற விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.;
image courtesy:BCCI
மும்பை,
இந்தியா-இங்கிலாந்து இடையே 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்த போட்டியில் இடது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் கடைசி நாளில் வேறு வழியின்றி 10-வது விக்கெட்டுக்கு களம் இறங்கினார். அப்போது வெற்றிக்கு 17 ரன் தேவையாக இருந்தது. ஒரு கையில் கட்டுபோட்டுக் கொண்டு ஒற்றைக்கையால் பேட் செய்ய வந்தது ரசிகர்களின் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
முன்னதாக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் 2-வது நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தபோது வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் ரிஷப் பண்டை பல முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.
ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அர்ப்பணிப்பு இந்த தொடரை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் மற்றொரு இந்திய வீரரும் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் பேட்டிங் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயருக்கு விரலில் சிறியளவு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அணியின் சூழலை கணக்கில் கொண்டு அவர் அந்த எலும்பு முறிவுடனே 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் அரைசதம் (57 ரன்கள்) அடித்தது குறிப்பிடத்தக்கது.
கருண் நாயருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என கூறப்படும் நிலையில் எதிர்வரும் துலீப் கோப்பை தொடரை அவர் தவற விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.