உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைக்கு ரூ. 2.5 கோடி ரொக்கப்பரிசு வழங்கிய ஆந்திர முதல்-மந்திரி
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.;
அமராவதி,
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆந்திராவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணியும் இடம்பெற்றிருந்தார். அவர் இறுதிப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை ஸ்ரீசரணி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, ஸ்ரீசரணிக்கு 2.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி சந்திரபாபு நாயுடு கவுரவித்துள்ளார். மேலும், ஸ்ரீசரணிக்கு கடப்பாவில் 1,000 சதுர அடி வீட்டுமனை மற்றும் குரூப் - 1 அளவிலான அரசுப்பணியையும் வழங்கியுள்ளார்.