அப்பீலை வாபஸ் பெற்ற விவகாரம்: சூர்யகுமார் யாதவ் செய்தது சரியே - இந்திய முன்னணி வீரர் ஆதரவு

ஜூனைத் சித்திக்கிற்கு அவுட் கொடுக்கப்பட்ட அப்பீலை சூர்யகுமார் யாதவ் வாபஸ் பெற்றார்.;

Update:2025-09-13 17:18 IST

மும்பை,

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 57 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் யுஏஇ பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் ஷிவம் துபே வீசினார். அந்த ஓவரில் துபே வீசிய 3-வது பந்தை எதிர்கொண்ட ஜூனைத் சித்திக் அடிக்க முயற்சித்த போது, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைக்கு சென்றது. பந்தை தவற விட்ட சித்திக், துபேவின் இடுப்பில் இருந்த டவல் கீழே விழுந்ததை சுட்டிக்காட்டினார்.

ஆனால் அந்த சமயத்தில் அவர் கவனக்குறைவாக கிரீசை விட்டு சற்று வெளியே நின்றார். இதனை கவனித்த சஞ்சு சாம்சன் உடனடியாக ஸ்டம்பு மீது பந்தை எறிந்து அவுட் கேட்டார். ரீப்ளேவுக்கு பிறகு 3-வது நடுவரும் அவுட் என தீர்ப்பளித்தார். ஆனால் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இது உண்மையான விளையாட்டின் உத்வேகத்துக்கு நல்லதல்ல என கூறி அப்பீலை வாபஸ் பெறுவதாக கள நடுவர்களிடம் கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றது.

இருப்பினும் ஒரு தரப்பினர் சூர்யகுமார் யாதவை விமர்சித்தனர். குறிப்பாக இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இதையே பாகிஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் செய்வாரா? என்று விமர்சித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சூர்யகுமார் யாதவ் செய்தது சரியே என்று இந்திய முன்னணி வீரரான ரகானே ஆதரவு கொடுத்துள்ளார். அத்துடன் இந்தியா கிரிக்கெட்டை எப்போதும் நியாயமாகவும் நேர்மையாகவும் விளையாடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இந்திய அணியும் கேப்டன் சூர்யாவும் சிறந்த முடிவு எடுத்தனர். ஏனெனில் ஜூனைத் ரன் ஓட முயற்சிக்கவில்லை. அவர் கிரீஸ் எங்கே உள்ளது என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். ஒரு விக்கெட் கீப்பராகவோ அல்லது பீல்டராகவோ, பந்து உங்கள் கையில் இருக்கும்போது, உங்கள் உள்ளுணர்வு ஸ்டம்புகளை நோக்கி வீசுவதாக இருக்கும். ஆனால் இந்திய அணி சரியான முடிவை எடுத்தது. அவர்கள் சிறந்த குணம் மற்றும் விளையாட்டின் நல்ல நேர்மைத்தன்மையை காட்டியுள்ளனர். கிரிக்கெட்டில் நீங்கள் பார்க்க விரும்புவது இதுதான்” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்