ஆசிய கோப்பை: இந்திய அணியில் 2 தகுதியான வீரர்கள் விடுபட்டுள்ளனர் - மனோஜ் திவாரி விமர்சனம்
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.;
image courtesy:PTI
மும்பை,
அடுத்த மாதம் துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (20 ஓவர்) இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய 2 தகுதியான வீரர்கள் விடுபட்டுள்ளனர் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “2 தகுதியான வீரர்கள் அணியில் இருந்து விடுபட்டுள்ளனர். ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர், மற்றவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அளித்த பேட்டிகளின் பழைய வீடியோக்களைப் பார்த்தால், அவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தியாவின் டி20 அணியில் எந்த நேரத்திலும் இடம்பெறக் கூடிய வீரர் என்று கூறியிருப்பார்.
அவரை டி20 அணியில் இருந்து வெளியே வைப்பது பற்றி யோசிக்க முடியாது. இப்போது அவரே பயிற்சியாளராக இருக்கும்போது, யஷஸ்விக்கு இடம் இல்லை. மேலும், கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயரின் ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடுகளைப் பார்த்தால், அவர் இந்த வடிவத்தில் சிறந்தவர்களில் ஒருவராக இருக்கிறார்.
அவர் 50 என்ற சராசரியில் ரன்கள் குவித்து, பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதற்கு முன்பு கொல்கத்தா அணியை வழிநடத்தி கோப்பை வென்று கொடுத்தார். அப்படிப்பட்ட அவர் டி20 அணியில் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால்தான் அணி தேர்வுமுறை நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்” என்று கூறினார்.