ஆசிய கோப்பை: தென் ஆப்பிரிக்காவை சேர்த்து இதனை அப்படி மாற்றுங்கள்.. ஏனெனில் இந்திய அணி.. - அஸ்வின் அதிருப்தி

இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்கும் எதிரணிகள் இல்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-11 13:17 IST

சென்னை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலகக்கோப்பை அடிப்படையில் மாற்றப்பட்டது. அதாவது அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும். இதில் இதுவரை 2 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்றும் என்று பலர் கூறிவருகின்றனர். ஏனெனில் டி20 தரவரிசையில் நம்பர் 1 அணியாக திகழும் நடப்பு சாம்பியனான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணிவகுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்கும் எதிரணிகள் இல்லை என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே தென் ஆப்பிரிக்காவை இணைத்து இத்தொடரை ஆசிய - ஆப்ரோ கோப்பை என்ற பெயரில் நடத்தலாம் என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அவர்கள் ஆசிய கோப்பையை மேலும் போட்டித்தன்மையுடன் மாற்ற, தென் ஆப்பிரிக்கா போன்ற அணியைச் சேர்த்து, அதை ஆப்ரோ-ஆசிய கோப்பையாக மாற்றலாம். தற்போதைய நிலையில், உண்மையான போட்டியை உருவாக்க ஒரு இந்தியா ஏ அணியைச் சேர்க்கலாம். இல்லையெனில் இது ஒரு போட்டியாகவே இருக்காது.

வங்காளதேசமும் இந்தத் தொடரில் உள்ளது. ஆனால் அவர்களை பற்றி நாம் பேசவில்லை. ஏனெனில் அவர்களும் மற்ற அணிகளைப் போலவே தடுமாறுகின்றனர். இந்த அணிகள் எப்படி இந்தியாவுடன் போட்டியிடப் போகின்றன?. இந்த முறை வேறு யாராவது வெற்றி பெற வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனெனில் அதுதான் ஆசியாவில் உண்மையான போட்டியை உருவாக்கும்.

குல்தீப் - வருண் ஆகியோரை எந்த எதிரணிகளும் சிறப்பாக எதிர்கொள்ளப் போவதில்லை. இந்தியாவின் வலிமையான பேட்டிங் வரிசையைப் பற்றி நாம் பேசவே இல்லை. அது போட்டியை வெல்லும் வீரர்களால் நிரம்பியுள்ளது. இது 2026 டி20 உலகக்கோப்பைக்கு ஒரு முன்னோட்டமல்ல, வெறும் திரை மட்டுமே. இந்த தொடர் அதற்கு ஒரு முக்கிய அளவுகோலாகவும் இருக்காது.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அச்சுறுத்தல் என்று சொல்லப்படும் நிலையில், அவர்களுக்கு எதிராக இந்தியா நன்றாக ஆடி 170+ ரன்கள் எடுத்தால், அந்த அணி அதை எப்படி துரத்தி வெற்றி பெறும்? இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்தியாவை வீழ்த்த ஒரே வழி, அவர்களை 155 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, பின்னர் அதை துரத்துவது மட்டுமே. பொதுவாக, ஒரு டி20 போட்டி பரபரப்பாக இருக்கும். ஆனால் இந்திய அணி ஆசியக் கோப்பையை ஒரு தலைப்பட்சமாக மாற்றும் திறனைக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்