ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பு: இந்தியா- பாகிஸ்தான் செப்.14-ந்தேதி மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.;

Update:2025-07-27 06:23 IST

image courtesy: @ACCMedia1

புதுடெல்லி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை (20 ஓவர்) நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றிருந்தது. ஆனால் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகி விட்டதால், பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாட முடியாத நிலைமை காணப்படுகிறது. 2027-ம் ஆண்டு வரை பெரிய போட்டிகளில் பொதுவான இடத்தில் மட்டும் மோதுவது என்று இரு அணிகளும் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளன.

இதையடுத்து ஆசிய கோப்பை போட்டியை இந்தியாவில் இருந்து பொதுவான இடத்துக்கு மாற்றுவது என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இந்திய கிரிக்கெட் வாரியமும் இதை ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டது.

போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பரம எதிரியான பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் சந்திக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்திய அணி லீக், சூப்பர்4 சுற்று, இறுதிப்போட்டி என 3 முறை பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கும். போட்டிக்குரிய இடங்களை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கவில்லை. ஆனால் துபாய் மற்றும் அபுதாபியில் ஆட்டங்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்