ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் எத்தனை ரன் அடிப்பார்..? இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. 41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
சமீப காலமாக இந்திய டி20 கேப்டனான சூர்யகுமார் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அவரது தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும்போதிலும், ஒரு பேட்ஸ்மேனாக அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. இந்த சூழலில் எதிர்வரும் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் எத்தனை ரன்கள் அடிப்பார்? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் நாளை (இன்று) பெரிய ஸ்கோரை அடிக்கப் போகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை (ஞாயிறு - சூரியன்) என்பது அவரது பெயரின் (’சூர்ய’குமார் யாதவ்) வரையறை. எனவே 'சூரிய' நாளில் விளையாடும் சூர்யா, நிச்சயமாக ஸ்கோர் செய்வார். அவர் குறைந்தபட்சம் 33 ரன்கள் அடிப்பார்” என்று கூறினார்.