ஆசிய கோப்பை: அந்த 3 பேர் எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்
இந்த அணியை வைத்துக்கொண்டு டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.;
image courtesy:PTI
சென்னை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப். 10-ந் தேதி எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து 14-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தானையும், 19-ந் தேதி ஓமனையும் சந்திக்கிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
இதில் நல்ல பார்மில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் வழங்காதது அநியாயம் என அஸ்வின் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ஷிவம் துபே ஆகியோர் கடந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அப்படிப்பட்ட அவர்கள் ஆசிய கோப்பைக்கான இந்திய அணிக்கு எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இந்த அணியை வைத்து நாம் ஆசிய கோப்பையை வெல்லலாம். ஆனால் டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பே இல்லை. இந்த அணியை உலகக்கோப்பைக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்களா? 6 மாதங்களே உள்ள டி20 உலகக்கோப்பைக்கான தயாரிப்பு இதுதானா?. அவர்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டனர்.
அக்சர் படேல் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங், ஷிவம் துபே மற்றும் ஹர்ஷித் ராணா எப்படி வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஐ.பி.எல். தொடர்தான் தேர்வுக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பே செயல்திறனைக் கருத்தில் கொண்டதாகத் தெரிகிறது” என்று கூறினார்.