ஆசிய கோப்பை: இந்திய அணியில் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு மறுப்பு..?
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர்.
இந்த அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு தகவல்களும் வெளிவந்த வண்னம் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் அதிரடி பினிஷர் ரிங்கு சிங் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்காக அறிமுகம் ஆன ரிங்கு சிங் அந்த வாய்ப்பில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி பினிஷராக செயல்பட்டு வந்தார். ஆனால் சமீப காலமாக மோசமான பார்மில் விளையாடி வருகிறார். அத்துடன் சுப்மன் கில் போன்ற முன்னணி வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்க்கப்பட உள்ளதாக கூறப்படுவதால் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது.