பெங்களூரு - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து
பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற இருந்தது .;
பெங்களூரு,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை காரணமாக கடந்த 9-ந் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 8 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன.
ஆனால் மாலை 6 மணியில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. மழையின் வேகம் விட்டு, விட்டு அதிகரித்தது. மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் போட்டியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் இரவு 10.30 மணியளவில் இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். 'டாஸ்' போடப்படாமலேயே ஆட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதனால் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, 2 முடிவில்லையுடன் 12 புள்ளி) 4-வது அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து நடையை கட்டியது. பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கியது. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 6 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.