பிரெவிஸ் அதிரடி சதம்.. ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.;
image courtesy:ICC
டார்வின்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி அதே டார்வின் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மார்க்ரம் 18 ரன்களிலும், ரிக்கல்டன் 14 ரன்களிலும், பிரிட்டோரியஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய பிரெவிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். விக்கெட்டுகள் விழுவதையெல்லாம் நினைத்து கவலைப்படாத அவர் அணியின் ரன் வேகத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார். அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் நிலைக்கவில்லை. ஆனால் எதை நினைத்தும் கவலைப்படாத பிரெவிஸ் தனது பேட்டிங்கில் மட்டுமே முழுகவனம் செலுத்தினார்.
இவரின் அதிரடியால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. பிரெவிஸ் 125 ரன்கள் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் மற்றும் துவார்ஷியூஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.