புச்சிபாபு கோப்பை: சத்தீஷ்கார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரித்வி ஷா சதம்.. கெய்க்வாட் ஏமாற்றம்
புச்சிபாபு கோப்பை கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது.;
image courtesy:PTI
சென்னை,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
அதன்படி ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கார், மராட்டியமும், ‘பி’ பிரிவில் இந்தியன் ரெயில்வே, ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, பரோடாவும், ‘சி’ பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன், மும்பை, அரியானா, பெங்காலும், ‘டி’ பிரிவில் ஐதராபாத், பஞ்சாப், மத்தியபிரதேசம், ஜார்கண்டும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். லீக் ஆட்டங்கள் 3 நாட்களும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி 4 நாட்களும் நடைபெறும்.
இதில் ஐ.சி.குருநானக் மைதானத்தில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் மராட்டியம் - சத்தீஷ்கார் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஷ்கார் முதல் இன்னிங்சில் 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மராட்டிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் ஒரு ரன்னில் நடையை கட்டினார். இருப்பினும் பிரித்வி ஷாவின் அபார சதத்தின் மூலம் (111 ரன்) மராட்டியம் முதல் இன்னிங்சில் 217 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 35 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய சத்தீஷ்கார் அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.