டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா விரைவில் ஓய்வு பெறுவார்.. ஏனெனில்.. - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ராவால் முழுமையான வேகத்தில் பந்துவீச முடியவில்லை.;

Update:2025-07-26 15:07 IST

image courtesy:PTI

மும்பை,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ஆலி போப் (20 ரன்), முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (11 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 544 ரன்கள் சேர்த்து, 186 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும், லியாம் டாசன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆலி போப் 71 ரன்களிலும், ரூட் 150 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய தரப்பில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பும்ரா, முகமது சிராஜ், கம்போஜ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த போட்டியில் 'நம்பர் 1' பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் திணறடிக்கும் அளவுக்கு வேகம் இல்லை. இதனால் இங்கிலாந்து அணியினர் சிரமமின்றி ரன் சேகரித்தனர்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கணித்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் ஓய்வைக் கூட அறிவிக்கலாம். ஏனெனில் அவர் தன்னுடைய உடலால் தடுமாறுகிறார். அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது அதனாலேயே இந்த போட்டியில் அவருடைய வேகம் குறைந்து விட்டது.

இருப்பினும் அவர் சுயநலமற்ற நபர். நாட்டுக்காக தம்மால் 100 சதவீத முயற்சிகளைக் கொடுக்க முடியவில்லை, போட்டிகளை வெல்ல முடியவில்லை, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று கருதினால் அவர் தொடர்ந்து விளையாட மறுப்பார். விராட், ரோகித், அஸ்வின் இங்கு (டெஸ்ட்) இல்லை. தற்போது பும்ரா இல்லாமலும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்