தான் அடித்த சிக்சரால் காயமடைந்த கேமராமேன்.. ஹர்திக் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 5-வது டி20 போட்டியில் இந்த சம்பவம் நடந்தது.;
image courtesy:BCCI
ஆமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி ரத்து) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் குயிண்டன் டி காக் 65 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும், தொடர்நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடித்த பந்து ஒன்று எல்லை கோட்டிற்கு வெளியே நின்ற கேமாரமேன் கையில் பட்டது. இதனால் அவர் கையில் காயம் ஏற்பட்டது.
இந்த போட்டி முடிந்ததும் நேராக கேமராமேனை நோக்கி சென்ற ஹர்திக் பாண்ட்யா அவரை கட்டி தழுவி ஆறுதல் கூறினார். அத்துடன் கேமராமேன் கையில் வைத்திருந்து ஐஸ் பேக்கை வாங்கி ஒத்தடம் கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யாவின் இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.