ப்ளேஷ்பேக் 2025-ல் நிறைவேறிய கோப்பை கனவு: சாதித்த 2 அணிகள்...விரைவான பார்வை
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியும், சர்வேதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியும் தங்களது கோப்பை ஏக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.;
சென்னை,
விளையாட்டு களம் என்பது நொடிக்கு நொடி பரபரப்பும், சுவாரஸ்யமான ஆச்சரியங்களும் நிறைந்தது. அந்த வகையில் கிரிக்கெட்டில் நடப்பு ஆண்டிலும் துளி அளவும் பஞ்சம் வைக்காமல் பல்வேறு சுவாரசிய நிகழ்வுகளுடன் நிறைவடைந்துள்ளது. 2025ம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் வேளையில், கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு அணிகளின் சாம்பியன் கோப்பை வெல்லும் ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது.அந்த வகையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு விருந்தாகவே அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியும், சர்வேதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா அணியும் தங்களது கோப்பை ஏக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.
**********************பெங்களூரு அணி குறித்து முதலில் பாப்போம்********************************
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வரலாறு:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடங்கிய 2008-ஆம் ஆண்டு முதலே பங்கேற்று வரும் அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) திகழ்கிறது. கர்நாடக மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அணி, கடந்த 17 ஐபிஎல் சீசனிலும் கோப்பையை வெல்லவில்லை, இருப்பினும் ரசிகர்களின் ஆதரவால் ஐபிஎல் வரலாற்றில் தனித்த இடம் பெற்றது.
2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெங்களூரு அணியின் முதல் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்தார். ஆரம்ப சீசன்களில் நிலைத்த வெற்றி கிடைக்காத நிலையில், 2009-ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், அந்த சீசனில் டெக்கன் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற்றது.
2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மீண்டும் பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2011-ல் சென்னை சூப்பர் கிங்ஸிடமும், 2016-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடமும் தோல்வியடைந்து, சாம்பியன் கோப்பையை நழுவ விட்டது. 2013-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார்.
பெங்களூரு அணிக்காக விளையாடிய முக்கிய வீரர்களில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் , மேக்ஸ்வெல், டேனியல் வெட்டோரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பாக, கிறிஸ் கெயில் 2013-ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் எதிரான போட்டியில் 175 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் மற்றும் அதிக தனிநபர் ஸ்கோர் சாதனையை படைத்தார்.
பல முறை அணித் தேர்வு மாற்றங்கள், கேப்டன் மாற்றங்கள் நடைபெற்ற போதிலும், RCB அணி ரசிகர்களிடையே 'ஈ சாலா கப் நம்தே' (Ee Sala Cup Namde) என்ற முழக்கத்துடன் மிகப்பெரிய ஆதரவை தொடர்ந்து பெற்று வந்தது . ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திகழ்கிறது.
ஐபிஎல் கோப்பை கனவு:
என்ன தான் சாதனைகள், ரசிகர் பட்டாளம் இருந்தாலும் ஐபிஎல் கோப்பையை வெல்வது அந்த அணிக்கு கனவாகவே இருந்தது. மேலும் ஐபிஎல் தொடங்கிய 2008-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பெங்களூரு அணிக்காக கிரிக்கெட் நட்சத்திரம் விராட் விளையாடி வருகிறார்.
சர்வேதேச கிரிக்கெட்டில் டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைகளை வென்ற விராட் கோலிக்கும் ஐபிஎல் கோப்பையை வெல்வது கனவாகவே இருந்தது. 2016-ஆம் ஆண்டு விராட் கோலி 973 ரன்கள், 4 சதங்கள், 7 அரை சதங்கள் எடுத்து, ஒரு சீசனில் அதிக ரன்கள் என்ற ஐபிஎல் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தார். இருப்பினும் அந்த கோப்பையை மட்டும் அவரால் வெல்ல முடியவில்லை.
பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் ஐபிஎல் கோப்பையை வெல்லாத காரணத்தால் பெங்களூரு அணியை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கடும் கேலி செய்து வந்தனர். “Ee Sala Cup Namde” என்ற RCB ரசிகர்களின் முழக்கம், அந்த முழக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் எதிர்கொண்ட விமர்சனமும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அளவுக்கு பெங்களுரூ அணியை ரசிகர்கள் கேலி செய்து வந்தனர்.
2025 ஐபிஎல் தொடர்:
இந்த நிலையில் தான் 18வது ஐபிஎல் தொடர் நடப்பு ஆண்டில் நடைபெற்றது. கடந்த மார்ச் 22 ஆம் தொடங்கி ஜூன் 3ம் தேதி வரை நடைபெற்றது.10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், கடைசி வரை கடும் போட்டிகள் நிலவியதால் ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
லீக் சுற்றுப் போட்டிகளில் பிளேஆப் இடங்களைப் பெற அணிகள் கடும் போராட்டம் நடத்தின. பல போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்றதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி கட்டம் வரை பரபரப்பான நிலை நீடித்தது. இளம் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தனர். அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள் தங்களின் நிலைத்த ஆட்டத்தால் அணிகளுக்கு பலமாக இருந்தனர்.இந்த தொடரில் பெங்களூரு சிறப்பாக விளையாடியது.
***********நிறைவேறிய கோப்பை கனவு*********************
2025 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் செயல்பட்டார். இந்த நிலையில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் 2025 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்தது.
லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியூரில் நடந்த 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பெங்களூரு வரலாற்று சாதனை படைத்தது.
அதே வேளையில், பஞ்சாப் அணி லீக் சுற்றில் 9 வெற்றியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் மும்பையை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அகமதாபத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, தொடக்கத்திலேயே நிதானமான அடித்தளத்தை அமைத்தது. விராட் கோலி பொறுப்பான இன்னிங்ஸ் ஆடி அணியின் ஸ்கோருக்கு முதுகெலும்பாக இருந்தார். அவர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 190 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியை, பெங்களூரு பந்துவீச்சாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்தனர். தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், டெத் ஓவர்களில் துல்லியமான பந்துவீச்சால் பஞ்சாப் அணியின் வெற்றி முயற்சியை முறியடித்தனர். இதன் மூலம் பெங்களூரு அணி வெற்றியை உறுதி செய்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 184 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஈ சாலா கப் நம்து - Ee Sala Cup Namdu”
இந்த வெற்றியுடன், “Ee Sala Cup Namde” என்ற ரசிகர்களின் முழக்கம் “Ee Sala Cup Namdu” என நிஜமாக மாறியது. மைதானத்திலும், பெங்களூரு நகரமெங்கும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த கோப்பை, பெங்களூரு அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத தருணமாக மாறியது. ஐபிஎல் வரலாற்றில் நீண்ட காலமாக பேசப்பட்ட ஒரு குறை, இந்த வெற்றியுடன் நிரந்தரமாக நிறைவுபெற்றது.
17 ஆண்டுகள் விராட் கோலியின் கைகளுக்கு வராத அந்த கோப்பை, 18வது ஆண்டில் அவரை முத்தமிட வைத்தது.
...........சரி இனி தென் ஆப்பிரிக்கா அணி குறித்து பாப்போம்......................
ஐபிஎல் தொடரில் எப்படி பெங்களூரு அணியோ, அதேபோல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணி. என்ன தான் திறமையான வீரர்களை கொண்டிருந்தாலும் , தொடர் முழுவதும் நன்றாக விளையாடினாலும், அரையிறுதி , இறுதி போட்டிகளில் தோல்வியடைந்து ஐசிசி உலகக் கோப்பையை நழுவ விடுவது அந்த அணிக்கு கைவந்த கலை.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, பொதுவாக Proteas என அழைக்கப்படுகிறது.உலக கிரிக்கெட் அரங்கில் நீண்ட வரலாற்றைக் கொண்ட அணியாகும்.
என்னதான் நீண்ட வரலாறை கொண்ட அணியாக இருந்தாலும் உலகக் கோப்பைக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கும் பெரிய இடைவெளி இருந்து கொண்டே வந்தது. உலகக் கோப்பை அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் பல தடவை தோல்வியை சந்தித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. 1992 முதல் 2024 வரை, இந்த அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நெருக்கமான போட்டிகளில் வெற்றியை தவற விட்டுள்ளது.அந்த அணி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் கோப்பையை வென்றது. அதன்பின்னர் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.இதனையடுத்து 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்தஜூன் மாதம் நடைபெற்றது.இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின .
ஒரு குழுவாக இந்த முறை எப்படியாவது ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்று அந்த அணி வீரர்கள் களமிறங்கினர். அதனை வீரர்களின் செயல்பாட்டில் காண முடிந்தது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.முதல் இன்னிங்ஸ் முன்னிலையும் சேர்த்து ஆஸ்திரேலிய அணி 282 ரன்களை தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. லார்ட்ஸ் மைதானத்தில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு எந்த அணியும் 280 ரன்களுக்கு மேலான ஸ்கோரை விரட்டிப்பிடித்ததில்லை. சவாலான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரையான் ரிக்கெல்டன் 6 ரன்னில், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.2-வது விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரமும், வியான் முல்டெரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 70-ஐ தொட்ட போது முல்டெரையும் (27 ரன்) ஸ்டார்க் வெளியேற்றினார்.
அடுத்து வந்த கேப்டன் பவுமாவுக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது. 2 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித் நழுவ விட்டார். கீழே விழுந்ததில் சுமித்துக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அத்துடன் அவர் சிகிச்சை பெற பெவிலியன் திரும்பினார். அவரால் மறுவாழ்வு பெற்ற பவுமா வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார். இதனால் ஆட்டம் படிப்படியாக தென்ஆப்பிரிக்கா பக்கம் திரும்பியது. ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய மார்க்ரம் தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். லார்ட்ஸ் மைதானத்தில் 4-வது இன்னிங்சில் (இலக்கை துரத்தும் இன்னிங்ஸ்) சதத்தை ருசித்த 6-வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார்.
பின்னர் பவுமா 66 ரன்னிலும், ஸ்டப்ஸ் 6 ரன்னிலும், ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த மார்க்ரம், 136 ரன்கள் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அத்துடன், தனது பணியை கச்சிதமாக செய்து முடித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 83.4ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஆனது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி. கோப்பை ஒன்றை தென் ஆப்பிரிக்க அணி வென்றுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் திறமையான் இரு அணிகளும் அவர்கள் எதிர்பார்த்த கோப்பையை வென்றது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இது 2025 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.