சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தான் செல்ல இந்திய நடுவர் மறுப்பு

நடுவர் குழுவில் இந்தியாவின் முன்னணி நடுவர் நித்தின் மேனன் இடம் பெற வேண்டும் என ஐ.சி.சி. விரும்பியது.;

Update:2025-02-06 08:55 IST

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறுகிறது

இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இதில் 3 போட்டி நடுவர் மற்றும் 12 களநடுவர்கள் இடம்பிடித்துள்ளனர். நடுவர் குழுவில் இந்தியாவின் முன்னணி நடுவர் நித்தின் மேனன் இடம் பெற வேண்டும் என ஐ.சி.சி. விரும்பியது.

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணிப்பதில்லை என முடிவு செய்திருப்பதாக நித்தின் மேனன் ஐ.சி.சி.யிடம் கூறியுள்ளார் அவரது இந்த முடிவை ஐ.சி.சி.யும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்