சாம்பியன்ஸ் டிராபி: தாயகம் திரும்பிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்.. காரணம் என்ன..?
இந்திய கிரிக்கெட் அணி தற்போது துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.;
image courtesy: PTI
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.
இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் வரும் 20-ம் தேதி மோதுகிறது. இதற்காக கடந்த 15-ம் தேதி துபாய் புறப்பட்டு சென்ற இந்திய அணியினர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கல் அவசர அவசரமாக துபாயிலிருந்து புறப்பட்டு தாயகம் (தென் ஆப்பிரிக்கா) சென்றுள்ளார்.
அதற்கான காரணம் என்னவெனில், மோர்னே மோர்கலின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதன் காரணமாக அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மோர்கல் தென் ஆப்பிரிக்க சென்றுள்ளார். இருப்பினும் அவர் மீண்டும் எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.