சாம்பியன்ஸ் டிராபி: வருண் சக்கரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார்- நியூசிலாந்து பயிற்சியாளர்
நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்;
Image : ICC
துபாய்.,
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் மகத்தான வெற்றி பெற்று கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் நியூசிலாந்து லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே தோல்வி கண்டுள்ளது. இதனால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து முயற்சிக்கும்.
இந்த நிலையில் நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
எங்களுக்கு எதிரான கடைசி லீக்கில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டியிலும் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். எனவே அவரது பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள். இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.