டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
டோனி டி சோர்சி மற்றும் டொனோவன் பெரீரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.;
ஜோகன்னஸ்பர்க்,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற பிப்ரவரி 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அனைத்து நாடுகளும் அறிவித்துவிட்டன. சில வீரர்கள், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டால், மாற்று வீரர்களை அணிகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டோனி டி சோர்சி மற்றும் டொனோவன் பெரீரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உலகக்கோப்பை டி20 தொடருக்கான அணியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று வீரர்களாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரியான் ரிகெல்டன் மற்றும் நடுவரிசை அதிரடி பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அணியின் மூத்த நட்சத்திர வீரரான டேவிட் மில்லருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் அடங்கிய பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. அவரின் காயத்தை பொறுத்து, அவர் அணியில் இருப்பாரா என்பது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்கும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.