சென்னையை வீழ்த்திய பின் பெங்களூரு அணியினர் அப்படி செய்திருக்க கூடாது - ஸ்ரீகாந்த் விமர்சனம்

சென்னை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின் பெங்களூரு அணியினர் ஜென்டில்மேனாக சென்றிருக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 06:45 GMT

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக பெங்களூரு அணி தோல்வியடைந்து வெளியேறியது. முன்னதாக லீக் சுற்றோடு வெளியேறும் என்று விமர்சிக்கப்பட்ட அந்த அணி கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றது.

குறிப்பாக கடைசிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அந்த வெற்றியை பெங்களூரு அணியின் வீரர்களும் ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடினர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின் ஆர்சிபி அணியினர் ஜென்டில்மேனாக சென்றிருக்க வேண்டும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அதை விட்டுவிட்டு அதிகமாக கொண்டாடியதால் ராஜஸ்தானுக்காக தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்று பெங்களூருவை தோற்கடித்ததாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"வாழ்வில் நீங்கள் நன்றாக செயல்படும்போது வாயை மூடிக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ ஒன்றிற்காக தேவையின்றி சத்தம் போட்டால் உங்களால் அந்த வேலையை செய்ய முடியாது. சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற்ற பின் அவர்கள் தேவையற்ற விஷயங்களை செய்தனர். அதனாலேயே ரவிச்சந்திரன் அஸ்வின் வந்து அவர்களை வீழ்த்தினார். அதனாலேயே கிரிக்கெட்டில் நீங்கள் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும்.

ஒருவேளை நீங்கள் நன்றாக விளையாடினால் அதற்காக வாழ்த்துகள். ஒருவேளை சுமாராக விளையாடினால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் வாயை திறந்து ஆக்ரோஷத்தை காட்டக்கூடாது. அவர்கள் தங்களுக்கு தாங்களே கம்பேக் கொடுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். அதை சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பலமுறை செய்து கோப்பைகளையே வென்றுள்ளன. ஆனால் ஆர்சிபி 6 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று வெளியேறினார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்