கான்வே, டேரில் அரைசதம்.. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 307 ரன்களில் ஆல் அவுட்
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;
image courtesy:ICC
புலவோயா,
ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் அடித்திருந்தது. வில் யங் (41 ரன்), டிவான் கான்வே (51 ரன்) ஆகியோர் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் வில் யங் (41 ரன்) மேற்கொண்டு ரன் அடிக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 34 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து கான்வே உடன் டேரில் மிச்சேல் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர்.
இவர்களின் சிறப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து வலுவான நிலையை நோக்கி சென்றது. இதில் கான்வே 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் பின்வரிசை வீரர்கள் சொதப்பினர். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்களில் ஆல் அவுட் ஆனது. டேரில் மிச்சேல் 80 ரன்களில் அவுட்டானார். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 158 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 31 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிக் வெல்ச் 2 ரன்களுடனும், வின்செண்ட் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் பிரையன் பென்னட் 18 ரன்களிலும், பென் கர்ரன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே இன்னும் 127 ரன்கள் பின்தங்கி உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.