சி.எஸ்.கே-வுக்கு புதிய கேப்டன், விக்கெட் கீப்பர் தேவை - சுரேஷ் ரெய்னா
சி.எஸ்.கே கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.;
Image Courtesy: @IPL / @ChennaiIPL
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.
சென்னை அணி இதுவரை 8 லீக் ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை அணி தொடர் தோல்விகளை சந்திக்க பேட்டிங்கே முக்கிய காரணமாக உள்ளது. சென்னை வீரர்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த தவறுதால் ரன்கள் குவிக்க தடுமாறுகிறது.
சென்னை தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சமயத்தில் பல்வேறு தரப்பினரும் சென்னை அணிக்கு தங்களது ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சி.எஸ்.கே முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு புதிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தேவை என தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு புதிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தேவை. இந்த அணியை வழிநடத்தக் கூடிய ஒரு வீரரை விரைவாக அடையாளம் காணுங்கள். அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் பலரும் 30 வயதைத் தாண்டி விட்டார்கள்.
இளம் வீரர்கள் மீது முதலீடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. மற்ற அணிகளைப் பாருங்கள். ப்ரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி போன்ற சில இளம் வீரர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாதை சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த அணியின் அச்சுறுத்தும் தவறுகளைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய சரியான நேரம் இதுதான். கிரிக்கெட் எங்கேயோ சென்றுவிட்டது. இனி போட்டிகளை வெல்வதற்கு புதிய வழிகளை நீங்கள் கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.