சாம்சனுக்கு ஈடாக 2 முன்னணி ஆல் ரவுண்டர்களை கொடுக்கும் சிஎஸ்கே.. ரசிகர்கள் ஷாக்
ராஜஸ்தானிடம் இருந்து சாம்சனை வாங்கும் முயற்சியில் சிஎஸ்கே ஈடுபட்டுள்ளது.;
image courtesy:PTI
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.
சாம்சனும் ஏற்கனவே ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து இருந்தார். அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு ஆல் ரவுண்டரான சாம் கர்ரனை ரூ.2.4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.