என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு காரணம் தோனிதான் - அக்சர் படேல் புகழாரம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.;
image courtesy:PTI
புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக நடப்பு சீசனுக்கான டெல்லி அணியின் புதிய கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். சமீப காலங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தன்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிதான் காரணம் என்று அக்சர் படேல் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சில நேரங்களில் எப்படி விக்கெட் கிடைக்கும் அல்லது எதிர்பாராத விஷயம் நடக்கும் என்பது பற்றி அவரிடம் (தோனியிடம்) பேசியுள்ளேன். அவர் சில மாற்றங்களை செய்ய எனக்கு பரிந்துரைத்தார். மஹி பாய் (எம்.எஸ். தோனி) உடன் எனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது, நான் அவருடன் என் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளேன்.
டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, அவரிடமிருந்து வாழ்த்து செய்தி எனக்குக் கிடைத்தது. அதற்கு முன்பு 2021 டி20 உலகக்கோப்பையில் அவர் இந்திய அணியின் ஆலோசகராக வந்தபோதும், நான் அவரிடம் பேசினேன். நான் அவரிடம் என் மனநிலையைப் பற்றி பேசுவேன். இப்போது நீங்கள் அதன் முடிவுகளைப் பார்க்கலாம். அதன் பிறகு நான் என்ன சாதித்திருந்தாலும், அதற்குரிய பெருமை அனைத்தும் மஹி பாயையே சேரும்" என்று கூறினார்.