வெளியேற்றுதல் சுற்று: ரோகித் அதிரடி.. குஜராத் அணிக்கு கடினமான இலக்கு நிர்ணயித்த மும்பை
இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி வெளியேறும்.;
முல்லான்பூர்,
பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மல்லுக்கட்டி வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார். அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, பேர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவர்களில் 84 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (33), திலக் வர்மா (25) தங்களது பங்குக்கு ரன்களை சேர்த்தனர்.
இறுதியில் ஹர்திக் சில சிக்சர்கள் விளாச, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர், ப்ரசித் கிருஷ்ணா ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக தகுதி பெறும்.