இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: 2 வீரர்கள் காயம்.. இந்திய அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்ப்பு

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-20 14:01 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

இதனிடையே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் காயத்தில் சிக்கியுள்ளனர். ஆகாஷ் தீப் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் 4-வது போட்டிக்கு முன்னதாக முழுவதும் குணமடைய முடியுமா என்பது தெரியவில்லை. மறுபுறம் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின்போது கை விரலில் காயம் அடைந்தார். இதன் காரணமாக இருவரும் 4-வது போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய தேர்வுக்குழு அன்ஷுல் கம்போஜை அணியில் சேர்த்துள்ளது. இவர் 4-வது போட்டிக்கு முன்னதாக இந்திய அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது.

கம்போஜ் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி இருந்தார். அப்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் பின்வரிசையில் சிறப்பாக பேட்டிங்கும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்