எவின் லூயிஸ் அதிரடி.. அயர்லாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.;

Update:2025-06-15 21:41 IST

image courtesy:twitter/@windiescricket

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஷாய் ஹோப் 51 ரன்களில் (2 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பவல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட எவின் லூயிஸ் 91 ரன்களில் (44 பந்துகள்) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் ஹெட்மயர் 15 ரன்களிலும், ஹோல்டர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் கீசி கார்டி (49 ரன்கள்) ஷெப்பர்டு (19 ரன்கள்) அதிரடியாக விளையாட வெஸ்ட் இண்டீஸ் 250 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்துள்ளது. அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்