முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பால்பிர்னி சதம் விளாசினார்.;
image courtesy:twitter/@ICC
டப்ளின்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பால்பிர்னியின் அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்தது. பால்பிர்னி 112 ரன்களும், டெக்டர் 56 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 54 ரன்களும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 304 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் அயர்லாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. வெறும் 34.1 ஓவர்களில் 179 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அயர்லாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 55 ரன்கள் அடித்தார். அயர்லாந்து தரப்பில் மெக்கார்த்தி 4 விக்கெட்டுகளும், ஜார்ஜ் டாக்ரெல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.